தமிழர்கள் வாய்டி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனை உணர்த்தியிருக்கின்றது.
வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பினரை நோக்கி விளக்கம் கோரி பல விடயங்களை தமிழ் சிவில் சமூகம் முன்வைத்துள்ளது.
1. ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த வேளை அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்களது முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
இதற்கான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் தார்மீகக் கடமையாகும்.
2. வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்தும் பேசுவதில் அர்த்தமில்லை.
பேச்சுகளில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை.
3. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயன் ஏதும் இல்லை.
4. தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டை கோருவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதன் அடிப்படையிலான தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமேயாயின் நாம் உண்மையான சுயாட்சியை பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும்.
இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வைத் தருவதோடு, இலங்கையில் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும், இவை பேரம் பேசும் பொருட்களும் அல்ல.
5. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாதது. பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. அழுத்தங்களுக்குப் பயந்து தமிழ்த் தேசியத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியாத பாழுக்குள் தள்ளக் கூடாது.
6. மாகாண சபைத் தேர்தல்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலே நாம் முன்னோக்கி நகர்வதற்கு பெரும் தடைக்கல்லாக அமையும்.
7. மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றதென கூட்டமைப்பு நிலைப்பாடாக பேச்சுவார்த்தை மேசையில் சர்வதேசத்திடம் வலியுறுத்தும் தார்மீகக் கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது.
8. கூட்டமைப்பு இன்னுமொரு தேர்தலில் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுத் தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டுமென்பதில்லை. இதனை மீறி தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் கூட்டமைப்பு பங்கெடுக்கக் கூடாது. மாற்று உபாயங்கள் குறித்து மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.
9. தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் தேசிய அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் கூட்டமைப்பைக் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலேயே சகல தேர்தல்களிலும் மக்கள் கூட்டமைப்புக்கு ஆணையை வழங்கி வருகிறார்கள்.
75 பேர் கையெழுத்திட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ள மேற்படி விண்ணப்பம் கூட்டமைப்பின் கண்களைத் திறந்தாக வேண்டும்.
ஒரு பாரிய வரலாற்றுக் கடமையை தமிழ் மக்களின் சார்பில் சுமந்துள்ள கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகத்தின் இந்த விண்ணப்பம் ஒரு ““துடுப்பாக'' அமையும் என்பதில் ஐயமில்லை. இதுவரை தனித்து நின்ற கூட்டமைப்பு இது போன்ற பல்வேறு தமிழ் சிவில் சமூகத்துடன் கைகோர்த்துப் பயணிக்க முன்வர வேண்டும்.
அரசாங்கத் தரப்பு கூட்டமைப்புக்கு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்ற காலம் இது.
வெற்றியின் மமதையிலான வார்த்தைகள் இன்னும் அரசாங்கத் தரப்பில் முடங்கிப் போகவும் இல்லை. முற்றுப் பெறவும் இல்லை. அரசாங்கத் தரப்பினரின் நாடாளுமன்ற உரைகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன.
உண்மையில் கூட்டமைப்புதான் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் சக்தி படைத்ததாக உள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் ““பேச்சுத் துணைக்கு'' கூட்டமைப்பு தான் தேவைப்படுகின்றது. சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசியாக வேண்டும்.
அது மாத்திரமல்ல கடந்த ஒருவருட காலமாக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கம் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மேல் பேசியும் தீர்வு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர முடியாத நிலையே காணப்படுகின்றது.
ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் “சாட்சியங்கள் இல்லாத யுத்தமொன்று நடைபெற்றுள்ள நிலையில் உண்மைகள் கண்டறியப்பட்டால் மட்டுமே சரியான பாடங்களை கற்றுக் கொள்ள முடிவதுடன் நேர்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்'' என்ற உரையையடுத்து அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடும் தொனியில் உரையாற்றியுள்ளார்.
“உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா. பிரசன்னம் போன்ற விடயங்களை வரவேற்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுகளை பயன்பாடுடையதாக முன்னெடுக்க விரும்புகின்றதா அல்லது அதுவாக முறித்துக் கொள்ள முயற்சிக்கின்றதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
“விசாரணைகளில் நம்பிக்கையில்லையென்றும் சர்வதேச விசாரணை தேவையென்றும்'' சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
“அதை ஏற்க முடியாது. சர்வதேச விசாரணைகள் எமக்கு அவசியமில்லை. பிற நாடுகளை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டுப் பிரச்சினையை சர்வதேச பொலிஸாருக்கு கையளிக்க நாம் தயாரில்லை. சர்வதேச பொலிஸ் எமக்கு அவசியமில்லை'' என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பீரிஸ்.
ஒரு வருட பேச்சுவார்த்தையில் ஒன்றுமில்லை என்று சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகப் போட்டுடைத்தது அரசாங்கத் தரப்புக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஊட்டியிருக்கலாம்.
ஆனால் அதுதான் உண்மை.
இன விவகாரத் தீர்வுக்கு 13 ஐத் தருவோம். இதற்குமப்பால் 13 பிளஸ் தருவோம் என்று கூறிய அரசாங்கம் தான் இன்று 13 க்கே தயாராக இல்லையென்பதை ஒரு வருடமாக உணர்த்தி வருகின்றது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தை தேவையா? என்று சிவில் சமூகம் கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
இந்த ஒரு நிலை உருவாகும் என்பதை எதிர்பார்த்தே இப்பத்தியில் தொடர்ச்சியாக கூட்டமைப்பு அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
தற்பொழுது ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டமைப்புடன் அரசாங்கம் ஒருவருடமாக பேசியும் ஒன்றும் வெளிவரவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஏதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை.
அமைச்சரைப் பொறுத்து அரசாங்கத்தில் ஓர் அங்மாக இருப்பவர். தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த பெறுபேறுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்தும் அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும்.
அமைச்சர் அவர்கள் கூறுவது போல் தமிழ்த் தலைமைகள் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டன என்பது உண்மையே. அரசுடன் இணைந்திருக்கும் அவருக்கு தீர்வு நோக்கிய காய்களை நகர்த்துவதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன.
இந்த செல்வாக்கை பயன்படுத்தி தீர்வு நோக்கி பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். அந்த வெற்றியே ஏனைய தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவதிலும் தங்கியுள்ளது.
வி.தேவராஜ்
Content of Popup