செவ்வாய், 3 ஜனவரி, 2012

நியூசிலாந்தில் தமிழ்த் தம்பதிக்கு கிடைத்த மகாராணி விருது

நியூசிலாந்து அரசால் வருடாந்தம் வழங்கப்படும் 'மகாராணி விருது' ஒக்லந்தைச் சேர்ந்த தமிழ்த் தம்பதிக்கு இம்முறை வழங்கப்பட்டுள்ளது. ஜோர்ஜ் அருளானந்தம், அவரது துணைவியார் ஆன் உமா ஆகியோரே இந்த விருதினைப்பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்ச் சமூகத்திற்கான கல்விச்சேவைக்காக ஜோர்ஜுக்கும் சமூக சேவைக்காக உமாவுக்கும் இந்தக் கௌரவம் கிடைக்கப்பெற்றுள்ளது.

1998 ல் நியூசிலாந்தில் குடியேறிய ஜோர்ஜ் அக்காலப்பகுதியில் இங்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் முறையாகத் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் வகையில் உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இவரது சீரிய பணிகள் இவரை நியூசிலாந்துத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக்கியதுடன் தமிழ்ச் சங்கத்தின் பணியினை மேலும் சிறப்பாக்கியது.

தமிழின் மீதும் தாயக மக்கள் மீதும் மிகுந்த நேசம் கொண்ட ஜோர்ஜ் இங்குள்ள தமிழ் மக்களுக்காகவும் தாயகத்திலிருந்து வரும் மக்களுக்காகவும் பல பொது அமைப்புகளில் இணைந்து அதில் பல முக்கிய பதவிகளை வகித்ததுடன் பல அரிய சேவைகளை மின்னாமல் முழங்காமல் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Ethnic Voice of New Zealand ,Tamil Community Education ,Consortium of Tamil Associations ,New Zealand Refugee Council,Auckland Regional Ethnic Council,Asian Social Services New Zealand, நியூசிலாந்துத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளில் முறையே நிறைவேற்றுப் பணிப்பாளர் குழு உறுப்பினர், பணிப்பாளர் சபை உறுப்பினர், இணைப்பாளர், தலைவர் போன்ற பல பதவிகளை வகித்தார்.

இந்தப்பதவிகள் மூலம் நியூசிலாந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு குடியேற்றம் மற்றும் புது வாழ்க்கை முறைமை தொடர்பான பல கருத்தரங்குகளை அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடத்தினார்.

இவற்றில் போரின் தாக்கத்தால் பாதிக்கப்படவர்களுக்கு இவர் ஏற்படுத்திக்கொடுத்த உளவளப் பயிற்சிச் செயலமர்வுகள் குறிப்பிடத்தக்கவை.

இவர் அமைத்த குடிவரவுக்குழு இங்கு வரும் தமிழ் மக்களுக்கும் அதேவேளை இங்கு குடியேறும் தமிழர்களின் பிரச்சனைகளை குடிவரவுத் திணைக்களம் அறிந்துகொள்ளவும் தக்க பயனுள்ளதாக அமைந்தது எனில் மிகையன்று.

நியூசிலாந்துப் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட மூலம் சமர்பிக்கப்படவிருந்த வேளை ஜோர்ஜ் இங்குள்ள தமிழ்க் கல்விமான்களை உள்ளடக்கிய ஒரு குழுவினை அமைத்து விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கு எதிரான சந்திப்புக்களை ஏற்பாடு செய்தார்.

அத்துடன் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இங்கு வரவழைத்து நியூசிலாந்தின் முக்கிய பிரமுகர்களுடன் பேசவைத்தார். நியூசிலாந்து, தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்யாமைக்கு இவை வழிவகுத்தன.

நியூசிலாந்தின் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்திற்குத் தலைமை தாங்கி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்தாடல்களை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நடத்தி தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் தனிநாட்டுக் கோரிக்கை பற்றியும் விளக்க ஏற்பாடுகள் செய்தார்.

கலாசார ஒருங்கிணைப்பும் பரிமாற்றமும் தொடர்பான கருத்தாடல்களை இங்குள்ள சமூகங்களுக்கிடையில் நடத்துவதில் முன்னின்றார்.

2003 இல் இவர் ஆரம்பித்த தமிழ்ச் சமூகத்திற்கான கல்வி அமைப்பு மூலம் அமைக்கப்பெற்ற பூங்கா பாடசாலை -மழலைகள் முதல் வயதானோர் வரையிலான பல கல்விச் செயற்பாடுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் முக்கிய அம்சமாக சர்வதேச ரீதியிலான தமிழ் அறிவுப்போட்டிகளும் பரீட்சைகளும் நடைபெற்று வருகின்றன. நியூசிலாந்தின் சிறப்புமிக்க தமிழ்ப் பாடசாலையாக இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராகப் பணியாற்றும் ஜோர்ஜ் அருளானந்தம் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மின்னியல் பொறியியற் பட்டதாரியுமாவார்.

இவரது துணைவியார் உமா 90 களின் இறுதிப்பகுதி முதல் இங்கு வரும் அகதிகளுக்கு அவர்களின் புது வாழ்விற்கான உதவிகளை வழங்குவதில் தொண்டராகச் செயற்பட்டு வந்தார். இவர் மவுண்ட்ரொஸ்கில் சமூக சபை உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.

நியூசிலாந்து ஆசிய சமூக சேவை நிறுவனம் தேசிய அகதிகள் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். Auckland Refugee Community Coalition அமைப்பின் உப தலைவராக பணியாற்றிய வேளை அகதிகள் சமூகங்களுக்கான முன்பள்ளிப் பாடசாலை ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார்.

அகதிகள் மீள் குடியேற்றத்தை வலுப்படுத்தல் தொடர்பில் பல சமூகங்களையும் கொண்ட அகதிகள் பெண்கள் குழாம் ஒன்றை ஆரம்பித்தார்.

தமிழ் சமூகத்திற்கான கல்வி Tamil Community Education அமைப்பின் பூங்கா தமிழ்ப் பாடசாலையின் இணைப்பாளராகப் பணியாற்றிய இவர் நியூசிலாந்து ஆரம்பக்கல்விப் பாட விதானத்தைத் தழுவிய வகையில் தமிழ் மொழியைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் வகையில் முன்பள்ளியை இதில் ஆரம்பித்தார்.

இத் தமிழ்ப்பாடசாலை மூலம் இந்நாட்டின் கல்வி அமைச்சுடன் ஊடாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டார் ஆன் உமா ஜோர்ஜ் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாகப் பல வெளிநாட்டு மாநாடுகளிலும் கருத்தாடல்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த வேளை Association of Medical Doctors of Asia (AMDA) அமைப்பின் தொண்டராகத் தாயகம் சென்று பணியாற்றினார். இதுதொடர்பான ஆய்வுக்கட்டுரையை இவர் 2005 இல் ஜப்பானில் நடைபெற்ற அனர்த்த நிவாரணம் தொடர்பான மாநாட்டில் சமர்ப்பித்திருந்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐ நா தலைமையகத்தின் அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடனான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார். சூரிச்சில் நடைபெற்ற ஜெனிவா கோல் ‘Geneva Call '2006 மாநாட்டிலும் பங்குபற்றினார்.

 Asian Pacific Refugee Right Network (APRRN) அமைப்பின் உறுப்பினரான இவர் தாய்லாந்தில் நடைபெற்ற அகதிகள் உரிமை தொடர்பான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார். ஆசிரியையான ஆன் உமா ஜோர்ஜ் சமூக சேவையில் உள்ள ஆர்வம் காரணமாக சமூகப்பணியில் பட்டதாரியானார்.


Content of Popup

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தரம் கூட கற்கவில்லை?- விக்கிலீக்ஸ் தகவல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தர கல்வியைக் கூட கற்கவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டபோது, கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ் ரீட் 2005 நவம்பர் 21ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு இரகசியமான தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அந்த தகவல் பறிமாற்றக் குறிப்பிலேயே, மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தரம் கூட படிக்கவில்லை என்ற தகவல் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

க.பொ.த உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்யாத மகிந்த ராஜபக்ஸ இப்போது ஒரு சட்டவாளர் என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவருடைய குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்சவின் எட்டுப் பிள்ளைகளில் மூன்றாவதாக, பேர்சி மகிந்த ராஜபக்ச 1945 நவம்பர் 18ம் நாள் வீரகெட்டியவில் பிறந்தார்.

காலி றிச்மன்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு நாலந்தா மற்றும் தேஸ்டன் கல்லூரிகளிலும் கல்வி கற்ற போதும் அவர் க.பொ.த உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்யவில்லை.

இருந்தபோதும், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நூலகத்தில் எழுதுனராக பணியாற்றிய அவர், 1970ம் ஆண்டு தனது தந்தையாரின் மறைவுக்குப் பின், அரசியலில் இறங்கி அவரது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகைமை தேவையில்லை என்று அப்போதைய சட்ட அமைச்சர் கொண்டு வந்த நடைமுறையின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ஸ கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.

1974இல் அவர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றதாகவும் அமெரிக்கத் தூதுவர் தனது தகவலில் குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Content of Popup

இலங்கையர் இன்று எரிநட்சத்திரங்கள் வீழ்வதைக் காணலாம்

இலங்கையில் உள்ளவர்கள் எரிநட்சத்திரங்கள் வீழ்வதை காணும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை வானிலையாளர் சங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவரான கலாநிதி காவன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுக்குச் சற்று பின்னரும் புதன்கிழமை அதிகாலையிலும் இலங்கையர் இக்காட்சியை காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குவாட்ரன்டிட்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த எரிநட்சத்திரங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உடைந்த 2003EHI எனும் வால்நட்சத்திரமொன்றின் பாகங்கள் என நம்பப்படுவதாகவும் கலாநிதி காவன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Content of Popup

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு: இதயச்சந்திரன்

இன்று 2012 இல் காலடி வைக்கிறது உலகம். கடந்த ஆண்டு நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களும், தீர்வில்லாப் பேச்சுவார்த்தைகளுமே நினைவிற்கு வருகின்றது.

நீண்ட போரினால் பாதிப்புற்ற மக்களின் இயல்பு வாழ்வு திரும்பி விட்டதாவென்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. மண் சுமந்த மேனியர், நிலமில்லாமல் அலைகின்றார். 54 ஏக்கர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்ணும், பாதுகாப்பு அமைச்சிற்கு தாரை வார்க்கப்படுகின்றது.

தமிழர் நிலங்களில் இராணுவம் குடி கொண்டால் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென ஒற்றையாட்சித் தத்துவம் எதிர்வு கூறுகிறது. காணி உரிமை தரமாட்டோமெனவும், இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமெனவும் ஆட்சித் தரப்பு கொண்டிருக்கும் விடாக் கண்டன் நிலைப்பாட்டின் சூத்திரம் இப்போது புரிகிறது.

கல்வி அமைச்சிற்கும் ,அரச அதிபருக்கும் எத்தனை முறைப்பாடுகளை இலங்கை தமிழர்ஆசிரியர் சங்கம் முன்வைத்தாலும், மத்தியில் முழு இலங்கைக்குமான சிங்கள இறைமையின் அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் அரசு , எதனையும் செவிமடுக்கப் போவதில்லை.

தீர்வு முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க மறுக்கின்றது என்கிற பரப்புரையில் அரசு ஈடுபடுவதோடு, அதற்கான சர்வதேச ஆதரவைத் திரட்டுவதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது.

புலம்பெயர் மக்களே அமைதியின் எதிரிகள்' என்று இந்தியாவிலிருந்து வெளிவரும் "டெக்கான் குரோனிக்கல்' என்கிற பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுயாதீன போர்க் குற்ற விசாரணை யொன்று நிகழ்த்தப்பட வேண்டுமென, தொடர் அழுத்தங்களை இலங்கை அரசு மீது பிரயோகித்து வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முதன்மை எதிரிகளாக அரசு பார்ப்பதையிட்டு ஆச்சரியமடையத் தேவையில்லை.

அரசிற்கு இரண்டு பிரச்சினைகள். ஒன்று சர்வதேச போர்க் குற்ற விசாரணைகளிலிருந்து தப்புவது, அடுத்ததாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றிற்கு உடன்படாமல் இழுத்தடிப்பது என்பதாகும். முதலாவது பிரச்சினையில் புலம்பெயர் சமூகம் அதிக சிரத்தையுடனும் ஈடுபடுவதால் அவர்கள்மீது அரசிற்குக் கோபம்.

இரண்டாவதாக, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இழுத்து காலத்தை நீடிக்கும் வியூகத்தினை நிறைவேற்ற முடியாமல் கூட்டமைப்பு தடுக்கின்றதே என்கிற ஆத்திரம்.

ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் மனித உரிமை சாசனத்தையும் ஏந்தியவாறு தமது படையினர் போரிட்டார்களென்று எத்தனை "ஒலிவ்' இலை கதைகளைக் கூறினாலும், "விடாது கறுப்பு' என்கிற பாணியில் பின்தொடரும் சுயாதீன சர்வதேச விசாரணை அழுத்தங்களால் அரசு ஆடிப் போயிருப்பதே நிஜம்.

கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு தமது பிரதிநிதிகளின் பெயர்களை வழங்காமல், வட- கிழக்கு இணைப்பு, காணி உரிமை மற்றும் காவற்துறை உரிமையென்ற நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைப் பற்றி பேசுகிறார்கள் என அரசு ஆதங்கப்படுகிறது.

புலம்பெயர் சமூகமே, தீர்வொன்றிற்கு வராமல் கூட்டமைப்பை கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறது என்கிற பழியையும் சுமத்த முற்படுகிறது. ஆயினும் தமிழ் சிவில் சமூகம், கூட்டமைப்பிடம் முன்வைத்த கோரிக்கைகளையிட்டு இதுவரை அரசு வாய் திறக்கவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் எப்பாடுபட்டாவது கூட்டமைப்பை இணைத்துவிட்டால் சிவில் சமூகத்தின் கோரிக்கைகளும் அதற்குள் கரைந்து விடுமென்பதே அரசின் கணிப்பு.
அதேவேளை, தமிழ் மக்களுக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்கினால். உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, ராகுல் காந்தியை கைது செய்ய எடுக்கும்முயற்சி போன்று, தனக்கும் அந்நிலை ஏற்படலாமென்று பொருத்தமில்லாக் காரணங்களை ஜனாதிபதி முன்வைப்பதை கவனிக்க வேண்டும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த, காவற்துறை அதிகாரங்களை வழங்க முடியாத நிலையில் தான் இருப்பதாக நியாயப்படுத்தினாலும், அடிப்படையில் சிங்கள இறைமைக்குரித்தான அதிகாரங்களை தமிழ்த் தேசிய இனத்திற்கு விட்டுக் கொடுக்க பெருந்தேசிய இனம் விரும்பவில்லையென்பதே உண்மை நிலையாகும்.

ஆகவே, இத்தகைய இழுபறி நிலையைத் தீர்த்துவைக்க, மூன்றாம் தரப்பொன்றின் அவசியம் உணரப்படுகிறது. அதற்காக சீனாவின் வெளிநாட்டமைச்சரோ அல்லது வென்ஜியாபோவோ இலங்கைக்கு வரமாட்டார்.

ஆகவே, போரில் உதவி புரிந்த, மேற்குலகின் எதிரியல்லாத, கூட்டமைப்பின் விருப்புத் தெரிவான இந்தியாவே இந்த இறுக்க நிலையைத் தளர்த்த உதவும் மூன்றாவது சக்தியாக இருக்கப் போகிறது.
ஜனவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வருகிறார் இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. இவர் வருவார் என்பதைப் புரிந்து கொண்ட ஜனாதிபதி, பகவான் சிங்கிற்கு வழங்கிய நேர்காணல் ஊடாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டார்.

அத்தோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 100 தடவைகளுக்கு மேல் கூட்டிய அமைச்சர் திஸ்ஸ விதாரனவும் இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பளவோடு இலங்கை மாகாணங்களை ஒப்பிட முடியாதெனக் கூறுவதோடு, எல்லாவற்றிலும் ஓரளவு அதிகாரங்களை வழங்க முடியுமென நவீன இணக்கப்பாட்டு பரிந்துரைப்புகளை முன்வைக்கிறார்.

அநேகமாக இலங்கை வரும் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, சம்பந்தன், திஸ்ஸ விதாரன மற்றும் ஜனாதிபதியை சந்திப்பாரென எதிர்பார்க்கலாம். வருகை தரும் இந்திய வெளிநாட்டமைச்சர், மன்னார் எண்ணெய் அகழ்வுப் பணி, புல்மோட்டை இல்மனைற் ஒப்பந்தம், வட பகுதி கடற்கரைப் பிரதேசத்தில் காற்றாலைகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம் என்பதோடு, ஆயிரம் வீட்டை 50,000 மாக அதிகரிக்கும் வழிவகை குறித்தும் பேசுவார்.

ஆனால், ஊடகப் பரப்பில், தமிழர் விவகாரம் குறித்துப் பேசுவதற்கே அவர் இலங்கை வந்துள்ளாரென பூதாகரமாகக் காட்டப்படும். இருப்பினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் நேரடி முதலீடுகளை எத்தனை பில்லியன் டொலர்களுக்கு அதிகரிக்கலாம் என்பதோடு, இலங்கை முதலீட்டுச் சபையில் நிலுவையில் இருக்கும் அங்கீகாரமளிக்கப்படாத முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிக்குமாறும் வெளிநாட்டமைச்சர் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்.

ஆனால், பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்திய வட- கிழக்கு இணைப்பு மற்றும் காணி, காவல்துறை அதிகாரப் பகிர்வு குறித்து, கூட்டமைப்பின் சார்பு நிலை எடுத்து எஸ்.எம். கிருஷ்ணா அரசோடு பேசுவாரென கற்பனையில் ஆழ்ந்து விடக் கூடாது.

ஆயினும், கூட்டமைப்பும், அரசும், தமது நிகழ்ச்சி நிரலிற்கு இசைவாக இந்திய வெளிநாட்டமைச்சரை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்களென எதிர்பார்க்கலாம். அதாவது, மாகாணங்களுக்கான அதிகாரங்களை அரசு வழங்க வேண்டுமென கூட்டமைப்பும், நாடாளுமன்றத் தெரிவுக் குழவில் கூட்டமைப்பு நிச்சயம் கலந்து கொள்ள வேண்டுமென அரசும் அவரிடம் வலியுறுத்தும்.

ஆனாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நலன் அடிப்படையில் இலங்கை அரசோடு சார்ந்து செல்லும் நிலைப்பாட்டினையே இந்திய அரசு எடுக்குமென்பதை சொல்லிப்புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.

இவை தவிர, இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, சகல கட்சிகளும் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையென்று செந்தோழர் அமைச்சர் டியூ. குணசேகர கூறும் அதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக் குழுவே இதற்கான சரியான அரங்கமென வலியுறுத்துவதை தமிழ் மக்கள் அவதானிக்க வேண்டும்.

உரிமைகள் பற்றிப் பேசினால் அவை நிபந்தனையென்று சகல பெருந்தேசியவாதக் கட்சிப் பிரமுகர்களும் கூறுகின்றார்கள். சிவப்பிலிருந்து நீலம் வரை நிறபேதமற்றுப் பேசுகிறார்கள். ஆனால், தமிழ்ப்பேசும் மக்கள் தரப்பில் இவ்வகையான ஒற்றுமையைக் காணவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் ஹசன் அலி அதிகாரஙகள் குறித்து தெளிவான கருத்தை முன்வைத்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்.

தமிழ் சிவில் சமூகத்தைச் சார்ந்த சான்றோர்களும் அடிப்படைக் கோட்பாட்டில் சமரசமோ, இணக்கப்பாடோ கூடாதென வலியுறுத்துகின்றனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசம், இறைமை என்கிற அடிப்படைக் கோட்பாடுகளிலும் பிராந்திய, சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் தமது தெளிவான பார்வையை முன்வைக்கிறது.

ஆகவே, வட கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் இனத்தின் அடிப்படை உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை ஏன் உருவாக்கக் கூடாது என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூகம், முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றோடு மலையக அரசியல் கட்சிகளும் ஜனநாயக மக்கள் முன்னணியும், புதிய இடதுசாரி முன்னணி போன்ற சிங்கள முற்போக்கு சக்திகளும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒன்றுபடுவது என்பது வெறுமனே எதிர்ப்பரசியல் அல்ல.

இந்த ஐக்கிய முன்னணியானது, வட, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களிற்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைக்க வேண்டும்.

பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள், எந்தவொரு தீர்வினையும் முன்வைக்காமல் காலத்தை இழுத்தடித்து நிலங்களை அபகரிக்கும். குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் என்கிற நீண்ட கால வரலாற்று பட்டறிவினை புரிந்து கொள்வது நல்லது.

மக்கள் மீதும், அவர்கள் அனுபவிக்காமல் மறுக்கப்படும் ஜனநாயக விழுமியங்கள் மீதும் பற்றுக் கொண்டவர்கள், தன் முனைப்பு, கட்சி விசுவாசம், அதிகார ஆசை என்பவற்றுக்கு அப்பால் அணிதிரள வேண்டிய காலத்தின் தேவை இன்று உணரப்படுகிறது.

ஏனெனில் நாம் இழந்தது மிக அதிகம்.

pathma73@hotmail.com

Content of Popup

கடத்திச் செல்லப்பட்ட பாதாள உலகக்குழு நபர் சடலமாக மீட்பு

ஜே.வி.பி கட்சி மேலும் பிளவடையக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் கட்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளி ஒருவர் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச தரப்பைச் சேர்ந்த ஒருவரே வெளிநாடுகளுக்கு தகவல்களை வழங்கி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் கட்சிக்குள் மற்றுமொரு பிளவு ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பிளவடைந்து சென்றுள்ள சிலரை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் வழிநடத்தி வருகின்றதாகவும் கட்சியை விட்டு தாம் விலகிச் செல்வதற்கும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் செயற்பாடுகள் காரணமாக அமைந்தது என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

எனவே பதவி ஆசைகளை துறந்து கட்சியை பாதுகாத்துக்கொள்ள சோமவன்ச, ரில்வின் போன்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup

விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார்- ஐ.தே.கட்சியின் பா.உ தயாசிறி

தனக்கு எதிராக மேற்கெொள்ளப்படும் எந்தவெொரு ஒழுக்காற்று விசாரணைகளையும் எதிர்கெொள்ளத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக தான் கவலையடைவதாகவும் எந்தவொரு தலைவருக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்க தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி முதியவர்களைக் கொண்ட கட்சியாக மாறி விட்டதெனவும் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே இதனை இளைஞர்கள் உள்ள கட்சியாக மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்காக சிறிகொத்தவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மோசடியானது என தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், சிரேஷ்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup

அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவுள்ள அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது.

ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார். கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விடயங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது.

Content of Popup

சுவீடன் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த இளைஞர்கள் கைது

சுவீடன் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீர் கொழும்பு பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நீர் கொழும்பு கடற்கரையோரத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த இளைஞர்களே இவ்வாறு சுவீடன் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

15 முதல் 17 வயது வரையிலான ஐந்து இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் மது போதையில் இருந்ததாகவும், பெண் சுற்றுலாப் பயணி அவர்களை கடந்து சென்ற போது இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

பெண் சுற்றுலாப் பயணி சத்தமிட்டதனைக் கேட்ட கவால்துறையினர், இளைஞர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Content of Popup