சனி, 17 டிசம்பர், 2011

வடக்கு கிழக்கு இணைப்பதால் எந்த நன்மையும் இல்லை: முதலமைச்சர் சந்திரகாந்தன்

கிழக்கு மாகாணத்தை துண்டாக்குவதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை( 17.12.2011)இடம்பெற்ற பெண்கள் வாழ்வாதார திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்கெளுக்கென்று ஒரு அரசியல் அடையாளம் அற்றவர்களாகவே வாழ்ந்துவருகின்றார்கள். இன்று முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றது.கிழக்கின் தனி அலகு தேவையாகவுள்ள முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனைப் பற்றிப் பேசப்போகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

வடகிழக்கை இணைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதற்காக, இன்று கிழக்கு மாகாணத்தை துண்டு துண்டுகளாக்கி இங்கு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் புத்தி ஜீவிகள் என்று கூறிக்கொள்வோர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைக்கப்படுவதால் எந்த நன்மையும் இல்லை. அதனை இங்கு யாரும் கோரவும் இல்லை. இங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது தெரிவியுங்கள், வடகிழக்கு இணைப்பதனால் முஸ்லிம் காங்கிரசுடன் பேசி என்ன திட்டத்தைக்கொண்டுவரவுள்ளீர்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று தெரிவியுங்கள்.

இங்கு ஒரு சமூகத்தின் நலன் என்று கூறி எமது சமூகத்தை அழிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களது பகுதிகளை எங்களால் அபிவிருத்தி செய்ய முடியும்.மூன்று இனங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் ஒற்றுமையாக தன்னிறைவுடன் வாழவே விரும்புகின்றோம். அதனை குழப்பி அரசியல் செய்ய யாரும் முனையக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாவதி பத்மராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக