தமிழ்ச் சமூகத்திற்கான கல்விச்சேவைக்காக ஜோர்ஜுக்கும் சமூக சேவைக்காக உமாவுக்கும் இந்தக் கௌரவம் கிடைக்கப்பெற்றுள்ளது.
1998 ல் நியூசிலாந்தில் குடியேறிய ஜோர்ஜ் அக்காலப்பகுதியில் இங்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் முறையாகத் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் வகையில் உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவரது சீரிய பணிகள் இவரை நியூசிலாந்துத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக்கியதுடன் தமிழ்ச் சங்கத்தின் பணியினை மேலும் சிறப்பாக்கியது.
தமிழின் மீதும் தாயக மக்கள் மீதும் மிகுந்த நேசம் கொண்ட ஜோர்ஜ் இங்குள்ள தமிழ் மக்களுக்காகவும் தாயகத்திலிருந்து வரும் மக்களுக்காகவும் பல பொது அமைப்புகளில் இணைந்து அதில் பல முக்கிய பதவிகளை வகித்ததுடன் பல அரிய சேவைகளை மின்னாமல் முழங்காமல் பெற்றுக்கொடுத்துள்ளார்.
Ethnic Voice of New Zealand ,Tamil Community Education ,Consortium of Tamil Associations ,New Zealand Refugee Council,Auckland Regional Ethnic Council,Asian Social Services New Zealand, நியூசிலாந்துத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளில் முறையே நிறைவேற்றுப் பணிப்பாளர் குழு உறுப்பினர், பணிப்பாளர் சபை உறுப்பினர், இணைப்பாளர், தலைவர் போன்ற பல பதவிகளை வகித்தார்.
இந்தப்பதவிகள் மூலம் நியூசிலாந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு குடியேற்றம் மற்றும் புது வாழ்க்கை முறைமை தொடர்பான பல கருத்தரங்குகளை அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடத்தினார்.
இவற்றில் போரின் தாக்கத்தால் பாதிக்கப்படவர்களுக்கு இவர் ஏற்படுத்திக்கொடுத்த உளவளப் பயிற்சிச் செயலமர்வுகள் குறிப்பிடத்தக்கவை.
இவர் அமைத்த குடிவரவுக்குழு இங்கு வரும் தமிழ் மக்களுக்கும் அதேவேளை இங்கு குடியேறும் தமிழர்களின் பிரச்சனைகளை குடிவரவுத் திணைக்களம் அறிந்துகொள்ளவும் தக்க பயனுள்ளதாக அமைந்தது எனில் மிகையன்று.
நியூசிலாந்துப் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட மூலம் சமர்பிக்கப்படவிருந்த வேளை ஜோர்ஜ் இங்குள்ள தமிழ்க் கல்விமான்களை உள்ளடக்கிய ஒரு குழுவினை அமைத்து விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கு எதிரான சந்திப்புக்களை ஏற்பாடு செய்தார்.
அத்துடன் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இங்கு வரவழைத்து நியூசிலாந்தின் முக்கிய பிரமுகர்களுடன் பேசவைத்தார். நியூசிலாந்து, தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்யாமைக்கு இவை வழிவகுத்தன.
நியூசிலாந்தின் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்திற்குத் தலைமை தாங்கி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்தாடல்களை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நடத்தி தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் தனிநாட்டுக் கோரிக்கை பற்றியும் விளக்க ஏற்பாடுகள் செய்தார்.
கலாசார ஒருங்கிணைப்பும் பரிமாற்றமும் தொடர்பான கருத்தாடல்களை இங்குள்ள சமூகங்களுக்கிடையில் நடத்துவதில் முன்னின்றார்.
2003 இல் இவர் ஆரம்பித்த தமிழ்ச் சமூகத்திற்கான கல்வி அமைப்பு மூலம் அமைக்கப்பெற்ற பூங்கா பாடசாலை -மழலைகள் முதல் வயதானோர் வரையிலான பல கல்விச் செயற்பாடுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் முக்கிய அம்சமாக சர்வதேச ரீதியிலான தமிழ் அறிவுப்போட்டிகளும் பரீட்சைகளும் நடைபெற்று வருகின்றன. நியூசிலாந்தின் சிறப்புமிக்க தமிழ்ப் பாடசாலையாக இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராகப் பணியாற்றும் ஜோர்ஜ் அருளானந்தம் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மின்னியல் பொறியியற் பட்டதாரியுமாவார்.
இவரது துணைவியார் உமா 90 களின் இறுதிப்பகுதி முதல் இங்கு வரும் அகதிகளுக்கு அவர்களின் புது வாழ்விற்கான உதவிகளை வழங்குவதில் தொண்டராகச் செயற்பட்டு வந்தார். இவர் மவுண்ட்ரொஸ்கில் சமூக சபை உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
நியூசிலாந்து ஆசிய சமூக சேவை நிறுவனம் தேசிய அகதிகள் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். Auckland Refugee Community Coalition அமைப்பின் உப தலைவராக பணியாற்றிய வேளை அகதிகள் சமூகங்களுக்கான முன்பள்ளிப் பாடசாலை ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார்.
அகதிகள் மீள் குடியேற்றத்தை வலுப்படுத்தல் தொடர்பில் பல சமூகங்களையும் கொண்ட அகதிகள் பெண்கள் குழாம் ஒன்றை ஆரம்பித்தார்.
தமிழ் சமூகத்திற்கான கல்வி Tamil Community Education அமைப்பின் பூங்கா தமிழ்ப் பாடசாலையின் இணைப்பாளராகப் பணியாற்றிய இவர் நியூசிலாந்து ஆரம்பக்கல்விப் பாட விதானத்தைத் தழுவிய வகையில் தமிழ் மொழியைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் வகையில் முன்பள்ளியை இதில் ஆரம்பித்தார்.
இத் தமிழ்ப்பாடசாலை மூலம் இந்நாட்டின் கல்வி அமைச்சுடன் ஊடாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டார் ஆன் உமா ஜோர்ஜ் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாகப் பல வெளிநாட்டு மாநாடுகளிலும் கருத்தாடல்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த வேளை Association of Medical Doctors of Asia (AMDA) அமைப்பின் தொண்டராகத் தாயகம் சென்று பணியாற்றினார். இதுதொடர்பான ஆய்வுக்கட்டுரையை இவர் 2005 இல் ஜப்பானில் நடைபெற்ற அனர்த்த நிவாரணம் தொடர்பான மாநாட்டில் சமர்ப்பித்திருந்தார்.
ஜெனீவாவிலுள்ள ஐ நா தலைமையகத்தின் அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடனான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார். சூரிச்சில் நடைபெற்ற ஜெனிவா கோல் ‘Geneva Call '2006 மாநாட்டிலும் பங்குபற்றினார்.
Asian Pacific Refugee Right Network (APRRN) அமைப்பின் உறுப்பினரான இவர் தாய்லாந்தில் நடைபெற்ற அகதிகள் உரிமை தொடர்பான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார். ஆசிரியையான ஆன் உமா ஜோர்ஜ் சமூக சேவையில் உள்ள ஆர்வம் காரணமாக சமூகப்பணியில் பட்டதாரியானார்.