வியாழன், 28 ஜூலை, 2011

ஐதேகவில் மீண்டும் பிளவு: தலைவர் கரு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித்?

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை கண்டதன் விளைவாக அக்கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடுமென கட்சியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று மாலை கூடி கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதோடு இன்று காலையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்புக்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் முடிவுகள் குறித்து சஜித் பிரேமதாஸ இன்று ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஏற்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கரு ஜயசூரிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை சஜித் பிரேமதாஸ விரும்புகிறார்.

எனினும் நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை இன்று நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் சஜித் பிரேமதாஸ அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் தொடர்ச்சியாக 17ற்கும் மேற்பட்ட தேர்தல்களில் படுதோல்வியை தழுவிக் கொண்டுள்ளது.

இதனை அடுத்து கட்சிக்குள் மறுசீரமைப்பு கொண்டுவரப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டு அதற்கென விசேட குழு அமைக்கப்பட்டு மக்கள் ஆணையுடன் மறுசீரமைப்பும் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அதில் சஜித் பிரேமதாஸ தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது ஏமாற்றம் அளித்தது.

அதன் பின்னர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கி அனைவரும் ரணில் விக்ரமசிங்கவால் பழிவாங்கப்பட்டனர். சஜித் பிரேமதாஸவிற்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்ட போது அது பெயரளவிலான பதவியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பொறுப்புக் குறித்து மீண்டும் பேசுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் விரைவில் பாரிய பிளவொன்று ஏற்படலாம் என ஊகிக்கத் தோணுகிறது.

குறிப்பு*"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக