திங்கள், 25 ஜூலை, 2011

தேர்தல் வாக்களிப்பின் மூலம் சர்வதேச விசாரணை வழிமொழிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை வழிமொழிந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறது எனவும் இது தொடர்பாக நீதியான விசாரணை தேவையெனவும் வற்புறுத்திவரும் மிகமுக்கியமான காலகட்டத்திலே இத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

சர்வதேச சமூகம் கொடுத்துவரும் இந்நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தல்களில் வென்று தமிழ் மக்கள் தம்பக்கம் என்று காட்டுவதற்காகப் பெரும்பாடுபட்டது.

அரச இயந்திரம் முழுவதையும் களமிறக்கி உள்ளூராட்சித் தேர்தலை ஒரு யுத்தம் போல எதிர்கொண்டது. இலவசங்களை அள்ளி வீசியது. வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வெற்று வாக்குறுதிகளை அளித்தது. வேட்பாளர்களை என்னை விலைகொடுத்தேனும் வாங்க முயற்சித்தது.

அவர்களை அச்சுறுத்தி தேர்தலிலிருந்து விலக வைக்க முயற்சித்தது. உளவியல் ரீதியான பீதியை ஏற்படுத்திப் பொதுமக்களை வாக்களிப்பில் கலந்துகொள்ள விடாமல் தடுத்தது. வாக்காளர்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றித் தாக்குதலும் நடத்தியது.

ஆனால் ஆசை வார்த்தைகளையும் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரும் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

வடக்குக் கிழக்கு இணைந்த தமது தாயகத்தில் சகல அதிகாரங்களுடன் கூடிய அரசியல் சுயாட்சி வேண்டும் என்பதே தமிழ்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

எந்த சலுகைகளுக்காகவும் அச்சுறுத்தலுக்காகவும் தங்கள் அரசியல் அபிலாசையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை தமிழ்மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் ஜனநாயகபூர்வமான தீர்வுக்குத் தலை வணங்கி இனிமேலும் காலம் தாழ்த்தாது அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவையென்பதை ஏற்று வழிமொழிந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தமது தாயகத்தில் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு ஏற்ற அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கத்தை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வற்புறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக