புதன், 27 ஜூலை, 2011

சக இராணுவத்தினராலேயே தனது மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக தாய் சந்தேகம்

இலங்கையின் வடக்கே இராணுவக் கடமையில் இருந்த போது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மதுசங்க என்ற படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தும்மோதர என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத் தீவு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

தனது மகனின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக ஜனாதிபதி முதற்கொண்டு சகல மட்டங்களிலும் தான் முறைப்பாடு செய்தும் பலன் கிட்டவில்லையென உயிரிழந்த சிப்பாயின் தாய் கூறுகிறார்.

உயிரிழந்த சிப்பாயின் உடலில் குறிப்பாக தலை, கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் பெருமளவு அடிகாயங்கள் இருப்பதாகவும் எலும்பு முறிவுகள் காணப்படுவதாகவும் வவுனியா வைத்தியசாலையிலிருந்து கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்ததன் பின்னணியிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

தனது மகன் சக இராணுவத்தினராலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவே உயிரிழந்த சிப்பாயின் தாய் தெரிவித்துள்ளார்.

உயிராபத்தை ஏற்படுத்தும் காயங்கள் இருந்த நிலையில், ஐந்து மணிநேரம் கழித்தே சிப்பாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவரின் சகோதரர் முறையிட்டுள்ளார்.

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என பீபீசியில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக