இலங்கை அகதியான மனைவிடம் சீதனம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக மதுரை வைத்தியசாலை பணியாளரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மதுரை, ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராம்கணேஷ் (30). இவரது மனைவி புஷ்பா (29). இலங்கை அகதியான இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில்:-
எனக்கும், நாங்கள் குடியிருந்த பகுதியில் வசிக்கும் வெங்கட்ராஜ் (56) என்பவரது மகன் ராம் கணேசுக்கும் (30) கடந்த 6.5.2005 அன்று திருமணம் நடந்தது. எனது பெற்றோர் தரப்பில் 8 பவுன் நகைகள் மற்றும் இந்திய ரூபா 2 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்தனர்.
ராம் கணேஷ் மதுரை பெரிய வைத்தியசாலையில் உள்ள சத்திரசிகிச்சை பிரிவின் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே அவரது அத்தையான லட்சுமியின் மகள் ராஜகுமாரியை திருமணம் செய்ய முடிவு செய்தார்களாம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை.
ராஜகுமாரிக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கும் எனது கணவருக்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. இதனால் என் கணவர் என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.
இதற்கிடையே எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவனை என் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு லெபனான் நாட்டுக்கு நான் வேலைக்கு சென்றேன்.
ராஜகுமாரியை என் கணவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க எனது சம்பளத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்டதால், நான் இந்திய ரூபா 2 லட்சத்து 30 ஆயிரத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன்.
தற்போது நான் திரும்பி வந்த நிலையில் என்னிடம் இருந்த இந்திய ரூபா 75 ஆயிரத்தையும் அவர் வாங்கிக்கொண்டார்.
ஆனால் என் கணவரும், அவரது தந்தை மற்றும் தஞ்சையில் வசிக்கும் ராஜகுமாரி, அவரது தாயார் லட்சுமி, பெரியம்மா மாரியம்மாள் ஆகியோர் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.
நான் வீட்டைவிட்டு வெளியேறினால்தான் ராஜகுமாரிக்கும், என் கணவருக்கும் திருமணம் செய்ய முடியும் என்று நினைத்து இப்படி நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், ராம்கணேஷ், அவரது தந்தை வெங்கட்ராஜ் ஆகியோரை கைது செய்து, மதுரை 2-வது ஜுடிசியல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை எதிர்வரும் 2ம் திகதி வரை காவலில் வைக்கும்படி நீதவான் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக