சனி, 16 ஜூலை, 2011

ராணாவை மெருகேற்றும் பணியில் படக்குழு

ரஜினி திரும்பி வந்துவிட்டார், முன்னிலும் உற்சாகமாகவும், பொலிவுடனும் காணப்படுகிறார், அவரைப் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை கூட பெரிதுபடுத்தவில்லை.

அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதில் அவர்கள் கவனம் திரும்பிவிட்டது. சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் நேராக போயஸ் கார்டனில் உள்ள அவரது பங்களாவுக்கு சென்றார்.

நேற்று காலை, கேளம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு சென்றார். போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வாஸ்துபடி மாற்றுப் பணிகள் நடப்பதால் ரஜினி இப்போது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கி 2 மாதங்கள் ஓய்வு எடுக்கிறார்.

அதாவது செப்டம்பர் மாதம் வரை அங்கு தங்கி ஓய்வு எடுக்கிறார். ரஜினியை சந்திக்க முக்கிய பிரமுகர்கள் உள்பட யாருக்கும் அனுமதி இல்லை. ரசிகர்களின் அன்புத்தொல்லையை தவிர்ப்பதற்காக, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரஜினியின் இப்போதைய உடனடி கவனம் 'ராணா' தான். அதற்கு முன் ஒரு மாதம் தன்னை முழுமையான ஃபிட்னஸூக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார். காரணம் இந்தப் படத்தின் கதை ரஜினியுடையது.

திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து செதுக்கியிருப்பவரும் அவரே. பெரிய பட்ஜெட் படம் என்பதால், 'எந்திரனை' விட மிகப் பிரம்மாண்ட வெற்றியை 'ராணா' பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்

அதற்கேற்ப முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 'ராணா' வுக்கான எதிர்ப்பார்ப்பு பெருகியுள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு, 'ராணா' வில் புதிய அம்சங்களைச் சேர்ப்பது, இருக்கிற காட்சியமைப்புகளை சரி செய்வது என ரஜினியின் ஒரு மாத கால ஓய்வு கழியப்போகிறது.

தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே புது அலுவலகம் திறந்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் முக்கிய கலைஞர்களுடன் படத்தை சிறப்பாக உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளவிருக்கிறார்.

படம் தொடர்பான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு தொடங்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கதை மற்றும் திரைக்கதையை இன்னும் மெருகேற்றும் பணி நடக்கும் எனத் தெரிகிறது.

விரைவில் ரஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் ரஜினியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க தீபிகா படுகோனேயும் இங்கு வர இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக