ஞாயிறு, 24 ஜூலை, 2011

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி: 4 பேர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, திருமலை பிரதான வீதியிலுள்ள முறக்கொட்டாஞ்சேனையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த கென்டைனர் ரக லொறி முறக்கொட்டாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகிச் சென்ற நிலையில், அப்பகுதியில் சைக்கிள்களில் பயணித்து கொண்டிருந்த மேசன் தொழிலாளர்கள் மீது மோதியது.

வந்தாறுமூலையிலிருந்து கல்குடா நோக்கி தொழிலுக்காக சென்ற மேசன்தொழிலாளர்களே இந்த விபத்தில் சிக்குண்டவர்கள் ஆவார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வந்தாறுமுலை, லேக்கவுஸ் வீதியை சேர்ந்த கனகசபை(47வயது) அவரது மகன் ஜீவராஜ்(18வயது), ரி.சுவேந்திரன்(32வயது), ரி.சதீஸ்(30வயது) ஆகியோரே படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியும் உதவியாளர்களும் ஏறாவூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக